General30 January 2026

நேருக்கு நேர் மோதும் நாடுகள் - இஸ்ரேலியத் தூதரை வெளியேற்றிய தென்னாப்பிரிக்கா - பதிலடி கொடுத்த நெதன்யாகு

தென்னாப்பிரிக்காவிற்கான இஸ்ரேலியத் தூதரக அதிகாரி ஏரியல் சீட்மேன் (Ariel Seidman), இராஜதந்திர நெறிமுறைகளை மீறியதாகக் கூறி, அவரை அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டது. 
 
அவருக்கு 72 மணித்தியாலங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அரசாங்கம் பலஸ்தீனத்திற்கான தென்னாப்பிரிக்கத் தூதுவர் ஷான் எட்வர்ட் பைனெவெல்ட்டை (Shaun Edward Byneveldt) அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவித்துள்ளது. 
 
சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை முன்வைத்ததில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. 
 
இந்தநிலையில், தூதுவர் சீட்மேன் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்கள் ஊடாக தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசாவை விமர்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
 
மேலும், தென்னாப்பிரிக்க அரசின் அனுமதியின்றி இஸ்ரேலிய அதிகாரிகளை நாட்டிற்குள் அழைத்தமை மற்றும் ஒரு பிராந்திய மன்னருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியமை போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெல்சன் மண்டேலாவின் மருமகனும், சர்ச்சைக்குரிய மன்னருமான புயெலேகாயா டாலிண்டியேபோ (Buyelekhaya Dalindyebo), கடந்த டிசம்பர் மாதம் இஸ்ரேலுக்கு விஜயம் செய்திருந்தார். 
 
அதனைத் தொடர்ந்து இஸ்ரேலிய குழுவொன்று மன்னரின் மாகாணத்திற்குச் சென்று உதவித் திட்டங்களை அறிவித்திருந்தது. 
 
இந்த நடவடிக்கையை "ஒருதலைப்பட்சமானது மற்றும் அடிப்படையற்றது" என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் ஆகியோர் வர்ணித்துள்ளனர். 
 
தென்னாப்பிரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாகவே தாம் இத்தீர்மானத்தை எடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 
 
2018 ஆம் ஆண்டு காசா மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா தனது தூதுவரை இஸ்ரேலில் இருந்து மீளப் பெற்றுக்கொண்டது. 
 
அதேபோல் 2023 இல் இஸ்ரேலும் தனது தூதுவரை தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related Recomands
Hiru TV News | Programmes