General23 June 2026

தெல்தெனிய கொலை வழக்கு: பிரதான சந்தேகநபரின் பாரிய நிதி மோசடி வலையமைப்பு அம்பலம்

கடந்த வாரம் தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றில் இருந்து பெண்ணொருவரின் உடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் அடங்கிய வலையமைப்பொன்றை நுவரெலியா காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

நுவரெலியா தலைமையக காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரியினால், நுவரெலியா பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், காவல்துறை ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் உள்ளிட்ட சிரேஷ்ட காவல் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விசேட விசாரணை அறிக்கையிலேயே இந்த விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் 17ஆம் திகதி இந்தக் கொலைச் சம்பவம் அறிக்கை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதான சந்தேகநபரின் பின்னணி குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

சந்தேகநபர் ஹொரம்பாவ, கொஸ்கொல்ல பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த மோசடி நடவடிக்கைகளில் அவரது மனைவிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்களை ஏமாற்றியமை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி பணம் மோசடி செய்தமை மற்றும் வாகன இறக்குமதி தொடர்பான மோசடிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சந்தேகநபருக்கு எதிராக நாடு முழுவதும் பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன்படி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 11,873,000 ரூபாய் மோசடி செய்தமை மற்றும் மோட்டார் வாகனமொன்றை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமை தொடர்பில் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

திருமணம் செய்வதாகக் கூறி 1,721,000 ரூபாய் மோசடி செய்தமை தொடர்பில் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

திருமணம் செய்வதாகக் கூறி 1,376,000 ரூபாய் மோசடி செய்தமை தொடர்பாக புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி செய்வதாகக் கூறி 2,200,000 ரூபா மோசடி செய்தமை தொடர்பில் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் வழக்கு உள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி 4,200,000 ரூபாய் மோசடி செய்தமைக்காக புதுக்கடை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபருக்கு எதிராக புதுக்கடை, ஹொரண மற்றும் கடுவெல உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் மேலும் பல வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இதற்கு இணையாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தரவுத்தள சரிபார்ப்புகளின்படி, மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த 2023 நவம்பரில் பேலியகொட காவல்துறையினராலும் மோசடி விசாரணைப் பிரிவினராலும் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி மற்றும் திருமணம் தொடர்பான நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் முறைப்பாடுகளுக்கு உள்ளாகியுள்ள சந்தேகநபரின் மனைவி குறித்தும் பல நிறுவனங்கள் மற்றும் காவல்துறை நிலையங்கள் ஊடாக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes