General24 June 2026

திடீர் சோதனையில் சிக்கிய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்!

மகரகம நாவின்ன பேருந்து நிலையத்தில் நேற்று (23) நடத்தப்பட்ட பரிசோதனையின் போது,பதின்மூன்று பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சக த்தின் தேசிய முன்னெடுப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்தில், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் மேற்கு மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் தனியார் பேருந்துகளைச் சேர்ந்த 200 சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.

முற்பகல் 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரிகளில் 13 பேர் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் (NTMI) மருத்துவ அதிகாரி ஜே.எம். லயனல், தெரிவித்தார்.

பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவைகளை உறுதி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாகும்புர பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சீரற்ற நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes