General02 July 2026

இலங்கை ஏதிலியின் பாக்கு நீரிணை நீச்சல் பயணம்: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கை தலைமன்னார் வரை பாக்கு நீரிணையை கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்தை மேற்கொள்வதற்கு அனுமதி கோரிய மனு குறித்து, மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருச்சியைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான தனுஜா என்பவர் தாக்கல் செய்த மனுவிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது மனுவில் "இலங்கை உள்நாட்டுப் போரின்போது குழந்தையாக நான் இந்தியாவுக்குக் அழைத்து வரப்பட்டேன். தற்போது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் முகாமற்ற இலங்கை ஏதிலியாக பதிவு செய்யப்பட்டு வசித்து வருகிறேன்.

நான் ஒரு நீச்சல் வீராங்கனை என்பதால், தமிழ்நாட்டின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை பாக்கு நீரிணையை கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.

இதற்கான அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், என்னிடம் கடவுச்சீட்டு இல்லை என்ற காரணத்தைக் கூறி அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, எனது நீச்சல் பயணத்துக்குத் தேவையான அனுமதியை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்" என்று அவர் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes