General15 July 2026

புகையிலை உள்ளடங்கிய வெற்றிலை விற்பனைக்கு விரைவில் தடை!

இலங்கையில் அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புகையிலை கலந்த வெற்றிலையை விற்பனை செய்வதைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் பதிவாகும் புற்றுநோய் வகைகளில் வாய் புற்றுநோய் முன்னணியில் உள்ள நிலையில், இதனைத் தடுக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி.பிரசாத் தெரிவித்துள்ளார்.

புகையிலை கலந்த வெற்றிலையைப் பயன்படுத்துவது வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய சட்டங்களின்படி, புகையிலை கலந்த வெற்றிலையை விற்பனை செய்தல், விநியோகித்தல், தம்வசம் வைத்திருத்தல் அல்லது விற்பனைக்காகக் காட்சிப்படுத்துதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் நாடளாவிய ரீதியில் உள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

எனவே, பொதுமக்களும் வர்த்தகர்களும் இந்த விடயம் தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறும், சட்ட விரோதமான முறையில் புகையிலையை வெற்றிலையுடன் கலந்து விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes