இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA), தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்தில் (PTA) காணப்பட்ட குறைபாடுகளை நீக்குவதற்குப் பதிலாக அவற்றை மேலும் விரிவுபடுத்துவதுடன் புதிய அபாயங்களையும் தோற்றுவிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்குகு அனுப்பியுள்ள கருத்துப் படிவத்தில், இந்த வரைவில் உள்ள தெளிவற்ற மற்றும் பரந்த வரையறைகள் காரணமாக அளவுக்கு அதிகமான குற்றமயமாக்கல் ஏற்படும் என ஐநா சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடுதல் மற்றும் ஊடக சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்பட்டு, பொதுவெளி பெருகிய முறையில் கட்டுப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
பரந்த அளவிலான நிறைவேற்று அதிகாரங்கள், முறையான நீதித்துறை மேற்பார்வையின்றி தன்னிச்சையான கைது மற்றும் நீண்டகால தடுப்புக்காவல், சித்திரவதைகளுக்கு உள்ளாகும் அபாயம் மற்றும் போதிய நியாயமான விசாரணைப் பாதுகாப்புகள் இல்லாமை ஆகிய விவகாரங்கள் குறித்தும் ஐநா மனித உரிமைகள் அலுவலகம் தனது கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.
காவல்துறையினரின் காவலில் இருக்கும்போது வழங்கப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் ஆதாரமாக ஏற்கும் விதி நீக்கப்பட்டமை போன்ற சில சாதகமான மாற்றங்கள் இந்த புதிய வரைவில் சேர்க்கப்பட்டிருந்தாலும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் உள்நாட்டு அரசியலமைப்பு உத்தரவாதங்களுக்கு முரணான பல விதிகள் இன்னும் இதில் நீடிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனால், பழைய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அரங்கேறிய கடுமையான மனித உரிமை மீறல்கள் மீண்டும் தொடர்வதற்கான அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, சர்வதேச சட்டக் கோட்பாடுகளான சட்டபூர்வத்தன்மை, அவசியம் மற்றும் விகிதாசாரத்தன்மை ஆகியவற்றுக்கு இணங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த தற்போதைய வரைவை கணிசமாக மாற்றி அமைக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சிவில் சமூகம் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் உண்மையான ஆலோசனை செயல்முறைகளில் ஈடுபடுமாறும், புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறும் ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்பட்ட கவலைகளுக்கு இணங்க, 'அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை' அரசாங்கம் தற்போது மறுவரைவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Latest News
நிதிச் சேவை வரி மக்களின் அன்றாட வாழ்க்கையை எப்படி பாதிக்கும்?
இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க சர்வதேச அளவில் குரல் கொடுப்பேன்: அமெரிக்காவில் அண்ணாமலை உறுதி!
வைபவ் சூர்யவன்ஷிக்கு இங்கிலாந்து நட்சத்திர வீரர் பாராட்டுடன் எச்சரிக்கை!
மீண்டும் திரையரங்கம் வரும் "ரன்"
TIN இல்லையென்றால் சிக்கலா? பொதுமக்களுக்கு முக்கிய விளக்கம்
டெங்கு பரவலைக் கட்டுபடுத்த 6 முன்மொழிவுகள் முன்வைப்பு
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் சவூதி நிதி உதவி மருத்துவ பீடம் இன்று திறந்துவைப்பு: பிரதமர் ஹரிணி தலைமை
காவ்யா மாறன் வாங்கிய பாகிஸ்தானின் முன்னணி வீரர் குழப்பத்தில்!
புதிய வரி மாற்றங்கள் மக்களுக்கு கூடுதல் சுமையா? நிபுணர் எச்சரிக்கை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு ஐநா கோரிக்கை!