Sports04 July 2026

காவ்யா மாறன் வாங்கிய பாகிஸ்தானின் முன்னணி வீரர் குழப்பத்தில்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அப்ரார் அஹமட், தனது தேசிய அணிக்காக விளையாடுவதா அல்லது இங்கிலாந்தின் 'தி ஹண்ட்ரட்' (The Hundred) தொடரில் பங்கேற்பதா என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு பலத்த சுழற்பந்து வீச்சாளர் தேவை என்பதால், தேர்வுக்குழுவினர் அப்ரார் அஹமடை அணியில் சேர்க்க தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.

இருப்பினும், இந்த டெஸ்ட் தொடரில் அவர் விளையாடினால், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'தி ஹண்ட்ரட்' தொடரில் அவரால் பங்கேற்க முடியாமல் போகும். 'தி ஹண்ட்ரட்' தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி அதற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, அதாவது 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதனால் 'நாடு முதன்மையா? அல்லது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கழக அணி முதன்மையா?' என்ற விவாதத்துக்கு மத்தியில் அப்ரார் அஹமட்டும் அவரது முகவரும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

'தி ஹண்ட்ரட்' தொடரில் 'சன்ரைசர்ஸ் லீட்ஸ்' (Sunrisers Leeds) அணியால் அப்ரார் அஹமட்  190,000 பவுண்டுகளுக்கு (சுமார் 2.3 கோடி இந்திய ரூபாய்) ஏலத்தில் வாங்கப்பட்டார்.

இந்த அணியின் உரிமையாளரான இந்தியாவைச் சேர்ந்த காவ்யா மாறன் (Kavya Maran), பாகிஸ்தான் வீரரை பெரும் தொகைக்கு ஏலத்தில் எடுத்தமைக்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்களினதும் சமூக ஊடகங்களினதும் கடுமையான எதிர்ப்புகளுக்கு உள்ளாகியிருந்தார்.

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஐபிஎல் (IPL) உள்ளிட்ட உலகளாவிய தொடர்களில் இந்திய உரிமையாளர்களைக் கொண்ட அணிகள் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுப்பதில்லை.

எனினும், பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக எந்தவொரு பாகுபாடும் காட்டக் கூடாது என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB) விதித்த நிபந்தனையின் காரணமாகவே, சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அஹமட்டை ஏலத்தில் எடுத்திருந்தது.

"இந்திய ரசிகர்களின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் உரிமையாளர் அப்ரார் அஹமடை ஏலத்தில் எடுத்துள்ளார். எனவே, அவர் இந்தத் தொடரில் விளையாடுவது மிக அவசியமானது. ஒருவேளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவரை விடுவிக்க மறுத்தால், அது அப்ரார் அஹமட் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமையும்" என அவரது முகவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்துள்ளன.

தேசிய அணியா அல்லது பிராந்திய லீக் தொடரா என்ற அப்ரார் அஹமட்டின் இறுதி முடிவு, பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes