General16 May 2026

இலங்கையிலிருந்து இயக்கப்படும் போலிப் 'பிரித்தானிய' கணக்குகள்: AI மூலம் இனவாதப் பரப்புரை செய்யும் சர்வதேச வலைப்பின்னல் அம்பலம்!

பிரித்தானியாவில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான கருத்துக்களைத் தீவிரமாகப் பரப்புவதற்காக, உள்நாட்டுப் பக்கங்கள் போலக் காண்பிக்கும் டஜன் கணக்கான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இயக்கப்பட்டு வருகின்றமை பிபிசி புலனாய்வில் அம்பலமாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலித் தகவல்கள் மற்றும் காணொளிகளைக் கொண்டு, பிரித்தானிய மக்களைத் திசைதிருப்பும் ஒரு பாரிய "செல்வாக்குச் செலுத்தும் நடவடிக்கை" இதன் பின்னணியில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

யோர்க்ஷயர் பகுதியிலிருந்து இயங்குவதாகக் கூறிக்கொள்ளும் இந்தப் பேஸ்புக் பக்கத்தில், வயதான பிரித்தானியர் ஒருவர் தனது ஓய்வூதியம் குறித்து அழுவது போன்ற காணொளி 1.3 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த கணக்கு உண்மையில் இலங்கையிலிருந்து ஒருவரால் இயக்கப்படுகிறது.

குடியேற்றவாசிகளுக்கு எதிரான போலி காணொளிகளைப் பகிரும் இந்தப் பக்கமும் இலங்கையிலிருந்தே இயக்கப்படுவதாக மெட்டா நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மைக் கருவிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இலங்கைக்கு மேலதிகமாக மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், வியட்நாம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும் இவ்வாறான கணக்குகள் இயக்கப்படுகின்றன. பிரித்தானியாவில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கணக்குகளைக் குறைந்த விலைக்கு விலைக்கு வாங்கி, வெளிநாட்டவர்கள் தங்களைப் பிரித்தானிய குடிமக்கள் போலக் காட்டிக்கொள்வது இதன் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்குகள் மூலம் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அதிதீவிரம் வாய்ந்த போலி ஏஐ காணொளிகள் உருவாக்கப்படுகின்றன:

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அரபு ஆடைகளை அணிந்த ஆண்கள் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவது போன்ற காட்சிகள்.

லண்டன், லிவர்பூல், பேர்மிங்ஹாம் ஆகிய நகரங்கள் 2050 ஆம் ஆண்டில் குப்பை மேடுகளாகவும், இஸ்லாமிய மயமாக்கப்பட்டும், வன்முறைகள் நிறைந்த இடங்களாகவும் மாறுவது போன்ற கற்பனை காணொளிகள். (இந்த வீடியோக்கள் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளன).

லண்டன் முதல்வர் சர் சாதிக் கான் இது குறித்துக் கருத்து வெளியிடுகையில், இந்த வலைப்பின்னலுக்குப் பின்னால் இரண்டு பிரதான காரணங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்:

ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் போன்ற பிரித்தானியாவிற்கு எதிரான நாடுகள் மற்றும் அமெரிக்காவின் தீவிர வலதுசாரி அமைப்புகள் பிரித்தானியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க இவற்றை ஆதரிக்கின்றன.

சமூக ஊடகங்களில் அதிகப் பார்வையாளர்களைப் பெறுவதன் மூலம் விளம்பர வருமானம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டு தனிநபர்களும் நிறுவனங்களும் இதனைச் செய்கின்றன.

இவ்வாறான போலி ஏஐ காணொளிகள் லண்டன் மற்றும் பிரித்தானியாவின் நற்பெயரை சர்வதேச ரீதியில் பாதிப்பதுடன், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறையையும் பாதிப்பதாக முதல்வர் கவலை வெளியிட்டுள்ளார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சமூக உளவியலாளர் பேராசிரியர் சண்டர் வான் டெர் லிண்டன் மற்றும் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யுவோன் மெக்டெர்மாட் ரீஸ் ஆகியோர் பின்வரும் ஆபத்துக்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்:

பொதுமக்கள் தங்களால் போலி ஏஐ காணொளிகளைக் கண்டறிய முடியும் என்று நம்பினாலும், உண்மையில் 55 வீதம் துல்லியத்தன்மையுடன் மட்டுமே அவர்களால் அதனைக் கண்டறிய முடிகிறது.

மக்கள் அதிகளவில் ஏஐ போலி உள்ளடக்கங்களைப் பார்க்கும் போது, அவர்கள் உண்மையான மற்றும் உத்தியோகபூர்வமான செய்திகளையும் நம்ப மறுக்கும் நிலை உருவாகிறது.

பல மக்கள் அது ஏஐ தயாரிப்பு என்று தெரிந்தாலும், அது தங்களது அரசியல் அல்லது சமூகக் கருத்துக்களுடன் ஒத்துப்போகும் பட்சத்தில், அதனை உண்மை என்றே ஏற்றுக்கொண்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து மெட்டா நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பில், ஒருங்கிணைக்கப்பட்ட போலிச் செயற்பாடுகளைத் தடுப்பதற்குக் உலகளாவிய விசேட குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், சமூகக் நெறிமுறைகளை மீறும் கணக்குகள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருந்தாலும் தடையின்றி நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes