General23 June 2026

செங்கோலைக் கைப்பற்ற முயன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் - சபை அமர்வில் பதற்ற நிலை

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று, சபாநாயகரிடம் அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரினர்.

இதற்கமைய, சபாநாயகர் இது குறித்து ஆளுங்கட்சியிடம் வினவியபோது, அதற்கு உடன்பட முடியாது எனவும், தேவைப்பட்டால் இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு உடன்படுவதாகவும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து கருத்துக்களை வெளியிடத் தொடங்கியதை அடுத்து, நாடாளுமன்றத்திற்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்ற நிலை உருவானது.

நீதிமன்றத் துறையில் எழுந்துள்ள கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குவதற்கு நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி, அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஒன்று இன்று (23) முற்பகல் நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

இதன் பின்னர், நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, குறித்த விடயம் தொடர்பாக சபாநாயகரிடம் அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரினார்.

அதனையடுத்தே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 8 நீதிபதிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றமை மற்றும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமை காரணமாகவே இந்த விவாதத்தைக் கோருவதாகக் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து நாடாளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செங்கோலை கைப்பற்ற முற்பட்டமையினால் நாடாளுமன்றத்தில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes