International19 June 2026

ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகையை அமெரிக்கா நீக்கியது: ஈரானிய உச்சத் தலைவரின் கருத்தும் வெளியானது!

மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடன்படிக்கையொன்றில் இரு நாடுகளும் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

"ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்க" இந்த முற்றுகை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தமது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் சில அமெரிக்க போர்க்கப்பல்கள் இன்னும் "பொதுவான பிராந்திய பகுதியில்" தரித்திருக்கும் என்றும் அந்த கட்டளையகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தனக்கு "வேறுபட்ட கருத்து" இருந்தபோதிலும், அமெரிக்காவுடனான இந்த உடன்படிக்கைக்கு தான் ஒப்புதல் அளித்துள்ளதாக ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த வேறுபட்ட கருத்து என்ன என்பதை அவர் வெளியிடவில்லை.

இருந்தபோதும், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், "ஈரானிய தேசத்தின் உரிமைகளைப் பாதுகாப்பார்" என அளித்த உறுதியின் பின்னரே இதற்கு அனுமதி வழங்கியதாக உச்சத் தலைவர் கூறியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி டிரம்ப் "நம்பிக்கையற்ற நிலையில், இந்த உடன்படிக்கையைக் கொண்டுவர அனைத்து வகையான செல்வாக்குகளையும் பயன்படுத்தினார்" என்றும் கமேனி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தெஹ்ரானுக்கும் வோஷிங்டனுக்கும் இடையே "நேரடி பேச்சுவார்த்தைகள்" இடம்பெறும் என்றாலும், அது "எதிரியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாக அர்த்தப்படாது" என்றும் உச்ச தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி பிராந்திய போரைத் தூண்டிய அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் அவரது தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, மார்ச் மாதம் மொஜ்தபா கமேனி பதவியேற்றார்.

பதவியேற்ற பின்னர் அவர் பகிரங்கமாகத் தோன்றாத நிலையில், இந்த உடன்படிக்கை குறித்து அவர் கருத்து வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

உச்ச தலைவர் கமேனியின் அறிக்கைக்கு டிரம்ப் நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்றாலும், ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான மோதல்கள் உட்பட "அனைத்து முனைகளிலும்" போர்நிறுத்தம் அமுலுக்கு வரும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes