General19 June 2026

பத்து நோயாளிகள் இருந்தால்தான் டெங்கு ஒழிப்பா? – அதிகாரிகளின் பதிலால் நாமல் அதிருப்தி!

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, அரசாங்கத்தின் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உள்ளூராட்சி அதிகாரிகளின் செயலற்ற தன்மை மற்றும் பரந்த கொள்கைத் தோல்விகளே டெங்கு பரவக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு குறித்து முறைப்பாடுகள் வரும்போது, குறைந்தபட்சம் பத்து நோயாளிகளாவது அடையாளம் காணப்பட்டால் மட்டுமே டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறுவதாகத் தெரிவித்தார்.

இதன் மூலம் டெங்குவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்றும், மருத்துவமனைகளில் நோயாளிகளின் நெரிசல் அதிகரித்துள்ளதால் போதிய இடவசதியின்றிச் சில நோயாளிகள் வீடுகளுக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மையைக் கண்டித்த அவர், பொது சுகாதார முயற்சிகளில் அரசியல் செல்வாக்கு தலையிடுவது நிலைமையை மோசமாக்குவதாகக் கூறியுள்ளார்.

இத்துடன் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்தும் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, உலகளாவிய சந்தையில் எரிபொருள் விலை குறைந்த போதிலும், இலங்கையர்கள் இன்னமும் அதிக விலை கொடுத்து எரிபொருளை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes