General18 June 2026

திருகோணமலை: 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்... 'கன்சைட்' நிலத்தடி சிறைச்சாலை விசாரணையில் புதிய திருப்பம்!

திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள 'கன்சைட்' எனப்படும் நிலத்தடி சிறைச்சாலை தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்துமாறு, திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நிலத்தடி சிறைச்சாலையில், கடத்தப்பட்ட பலர் சித்திரவதை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துவருகிறது.

அதன் அடிப்படையில், நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன், நிலத்தடி சிறைச்சாலைக்குச் சென்று கள ஆய்வை மேற்கொண்டிருந்தார்.

பதினொரு இளைஞர்களைக் கடத்தி காணாமலாக்க செய்ததுடன், மேலும் பலரைச் சித்திரவதை செய்வதற்கு இந்த 'கன்சைட்' சிறை பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் பணித்துள்ளார்.

அதேநேரம், குறித்த அறிக்கையுடன் சம்பவம் தொடர்பான காணொளிப் பதிவுகளையும், நிழற்;படங்களையும் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதவானின் கள ஆய்வைத் தொடர்ந்து, பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes